ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையின் படி, முகமது சிராஜ் 729 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட் 727 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து அணியை சேர்ந்த ட்ரெண்ட் போல்ட் 708 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார். நான்காவது இடத்தை ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஸ்டார்க் பிடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காயம் காரணமாக ஓய்விலிருந்த முகமது சிராஜ் கடந்த பிப்ரவரி மாதம் ஒருநாள் போட்டிகளில் விளையாட தொடங்கினார். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து 20 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான தொடரில் முகமது சிராஜின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளையும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2022ம் ஆண்டில் இந்திய பந்துவீச்சாளர்களில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக உள்ளார். அந்த ஆண்டில் 15 மேட்சுகளில் விளையாடிய சிராஜ் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ் சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பந்துவீச்சாளராக உள்ளார். இந்த ஆண்டில் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.