மோடிதான் நிரந்தரமான பிரதமர், INDIA கூட்டணியில் நாளுக்கு ஒரு பிரதமர் இருப்பர் என ராமேஸ்வரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
“என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குவதற்கான தொடக்க விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது.
இந்த தொடக்கவிழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டணி கட்சிகள் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் நடப்பது சாமானியனின் ஆட்சி. அனைத்து நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை பெருமிதத்துடன் பார்க்கின்றன. மோடி அளவிற்கு எந்த பிரதமரும் தமிழை உயர்த்திப் பிடித்ததில்லை. பிரதமர் மோடி இதயத்தால் தமிழர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் திருக்குறளை பிரபலப்படுத்தவில்லை. திட்டங்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் மோடி உள்ளார். மோடிதான் நிரந்தரமான பிரதமர். ஆனால் இந்தியா கூட்டணியில் நாளுக்கு ஒருவர் பிரதமர் இருப்பர். தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதனை அடுத்து என் மண் என் மக்கள் யாத்திரையை அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமித்ஷா, அண்ணாமலை, எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர் நடைப்பயணத்தில் நடந்து சென்றனர்.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 168 நாட்கள் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார். இந்த பயணத்தில், ஆயிரத்து 700 கிலோமீட்டர் தொலைவு நடைபயணமும், 900 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகன பிரசாரமும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அண்ணாமலை இரவு நேரங்களில் ஓய்வெடுக்க பிரம்மாண்ட சொகுசு வாகனமும் பின்னே செல்ல இருக்கிறது. இப்பயணத்தின் போது மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கி சொல்வோம் எனவும் அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.







