கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மருத்துவக் கட்டமைப்பை அதிகரிப்பதற்கு உதவி அளிக்கப்படுவதுடன், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 12 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார்.
தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சுகாதாரப்பணியாளர்கள் வேறு பணிகளுக்கு மாற்றம் செய்யப்படக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மாநில வாரியாக தடுப்பூசி வீணாவது குறித்தும் பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். அடுத்த சில மாதங்களில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.

10 சதவீதமும் அதற்கு அதிகமாகவும் உள்ள கொரோனா நோயாளிகளைக் கொண்ட மாவட்டங்களில் விரைவான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளும்படியும் மாநிலங்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். மாநிலங்களில் சுகாதாரக் கட்டமைப்புகளை அதிகரிப்பதற்கு தேவையான உதவியும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி மாநிலங்களுக்கு உறுதி அளித்துள்ளார்.







