உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனைத் தொடர்ந்து தாயகம் திரும்பிய பிரக்ஞானந்தா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது தாம் வென்ற வெள்ளிப் பதக்கத்தை முதல்வரின் கையில் கொடுத்து அதனை பிரக்ஞானந்தா பெற்றுக் கொண்டார். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரக்ஞானந்தாவிடம் வழங்கினார்.
இந்நிலையில், பிரக்ஞானந்தாவை அவரது குடும்பத்தினருடன் நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக உள்ளது. என்னையும், எனது பெற்றோரையும் ஊக்கப்படுத்திய பிரதமருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
பிரக்ஞானந்தாவின் இந்த பதிவிற்கு பதில் அளித்து பாராட்டியுள்ள பிரதமர் மோடி தனது X பக்கத்தில் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்துகிறீர்கள். இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணம் பிரக்ஞானந்தா. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.







