சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் 98 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள துறைமுகம் பொறுப்பு கழக அலுவலகத்தில் சென்னை காசிமேடு துறைமுகத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பாலிவால் மற்றும் துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல்.முருகன், கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 துறைமுகங்களை நவீனப்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதற்காகவே சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் நவீன படுத்துவது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.
மேலும், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் 98 கோடி ரூபாய் செலவில் பல வசதிகளுடன் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் எனவும், குளிர்சாதன வசதியுடன் கூடிய பதப்படுத்தும் அரங்கம், ஐஸ் குடோன் உள்ளிட்ட அனைத்தும் இங்கே ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்த அவர், இதன் மூலம் பல செலவுகளை குறைக்க முடியும் எனவும், நவீன முறையில் பல்வேறு வசதிகளை கொண்டுள்ள மீன்பிடி துறைமுகமாக இது உருவாக உள்ளது என கூறினார். தமிழகத்தில் இதுபோன்ற மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்த உதவிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் கடல்பாசி பூங்கா தமிழகத்தில் மட்டும் தான் ஏற்படுத்தப்பட உள்ளது. தற்போது கடல்பாசி தொழில் வளர்ந்து வரும் தொழிலாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இதற்கான இடத்தேர்வு இன்னும் 10 முதல் 15 நாட்களில் முடிய உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், மீன்வளத்துறையில் இன்னும் பல மாற்றங்களை கொண்டு வருவது தான் நமது நோக்கம் எனவும், மீனவர்களின் பாதுகாப்பு நமது பாதுகாப்பு, அதற்காக அரசாங்கம் தனி கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறினார்.
Advertisement: