முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள்

மகிந்த ராஜபக்ச ராஜினாமா – என்ன விளைவை ஏற்படுத்தும்?


பால. மோகன்தாஸ்

கட்டுரையாளர்

இலங்கையின்; குறிப்பாக சிங்கள மக்களின் சக்திவாய்ந்த தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ச தற்போது, அந்த நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது அரசியல் வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த தலைகீழ் மாற்றம் குறித்தும், அவரது ராஜினாமா இலங்கை அரசியலில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பது குறித்தும் விவரிக்கிறது இந்த கட்டுரை.

அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்து, தனது 24ஆவது வயதிலேயே இலங்கையின் நாடாளுமன்றத்திற்குத் தேர்வானவர் மகிந்த ராஜபக்ச.

1994-2001 காலகட்டங்களில் அப்போதைய அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசில், தொழிலாளர் துறை அமைச்சராகவும், மீன்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த மகிந்த ராஜபக்ச, 2004ல் இலங்கையின் பிரதமரானார்.

2005ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை சுதந்திர கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தபோது, சிங்கள மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட மகிந்த ராஜபக்ச, இதன் காரணமாக 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.

2015ம் ஆண்டு, மூன்றாவது முறையாகவும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச, தேர்தலில் தோல்வியை தழுவினார். மகிந்தவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேனா, அதிபரானார். இதையடுத்து மகிந்த மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.

2019, ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் இலங்கை அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. நாட்டின் பாதுகாப்பில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதையடுத்து அதே ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச அதிபரானார். அவர், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சுமார் இரண்டரை ஆண்டு காலம் இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தன்னெழுச்சியாக நிகழ்ந்து வரும் பொதுமக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

 

இதனையடுத்து, மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதல், அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, கடும் கோபத்தில் இருந்த போராட்டக்காரர்கள், ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் காரணமாக மிகப் பெரிய கொந்தளிப்புக்கு உள்ளாகி, மகிந்த ராஜபக்ச,  அவரது தம்பியும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச, ஆளும் கட்சி எம்பிக்கள் என பலரது வீடுகளுக்கு தீ வைத்தனர். இதனால், இலங்கையில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இனியும் இலங்கையில் இருப்பது பாதுகாப்பானதாக இருக்காது என மகிந்த ராஜபக்ச கருதுவதாகவும், எனவே வெளிநாட்டுக்கு தப்பி ஓட அவர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதை தவிர்க்கும் நோக்கில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலை கடற்படைத்தளத்திற்கு ஹெலிகாப்டரில் தனது குடும்பத்தினருடன் வந்துள்ள ராஜபக்ச, அங்கிருந்து சீனன்குடா விமானநிலையம் வழியாக தப்ப திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். மகிந்த ராஜபக்ச, இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்றும், இலங்கையில்தான் அவர் இருப்பார் என்றும் அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களில் பெரும் பகுதியினரால் அதிகம் கொண்டாடப்பட்ட மகிந்த ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் தற்போது இருண்டு கிடக்கிறது. 76 வயதாகும் அவர், சொந்த மக்களாலேயே வெறுக்கப்படக் கூடியவராக மாறி இருக்கிறார்.

ஊழல் மலிந்த; அராஜகம் நிறைந்த; அவரது குடும்ப அரசியலும், அவர் எடுத்த தவறான முடிவுகளுமே இதற்குக் காரணம் என அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இலங்கையில் இனி அவருக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், மகிந்த ராஜபக்சவின் ராஜினாம இலங்கை அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மகிந்த ராஜபக்ச மட்டுமின்றி, அவரது தம்பியான அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என போராடும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர் ராஜினாமா செய்வாரா, எப்போது செய்வார் என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது.

கோத்தபய ராஜினாமா செய்தால் அடுத்து நிகழக்கூடிய அரசியல் நகர்வுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், நெருக்கடியை சமாளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருடன், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஜித் பிரேமதா, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியாளர்களே காரணம் என்று குற்றம் சாட்டினார். அவர்கள் பொறுப்பில் இருந்து விலகுவார்களானால், எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயார் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மக்களை அமைதிப்படுத்த முடியும் எனும் நிலையில், அது எப்போது நிகழும் என்பதே தற்போதைய மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: பொன்முடி

Ezhilarasan

கன்னியாகுமாரி மக்களவை தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி?

Gayathri Venkatesan

ஆப்கானிஸ்தானில் ஐபில் போட்டிகளை ஒளிபரப்ப தலிபான் திடீர் தடை

Ezhilarasan