பெங்களூருவில் போதைப்பொருள் வழக்கில் கன்னட நடிகை உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடா்பாக, பிரபல
நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 11 பேரை பெங்களூரு மத்திய
குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர்.
இதற்கிடையில், பெங்களூரு கோவிந்தபுரா பகுதியில் கடந்த 12-ஆம் தேதி நைஜீரியாவை சேர்ந்த தாமஸ் என்பவரை போதை பொருள் விற்றதாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னட நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கன்னட நடிகையும் மாடலுமான சோனியா அகர்வால், தொழில் அதிபர்கள் பரத், வஜன் சென்னப்பா ஆகியோர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். சோனியா வீட்டில் இருந்து 40 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். வஜன் சென்னப்பா, தொழிலதிபர் பரத் ஆகியோர் வீட்டில் இருந்து போதைப்பொருட்கள் சிக்கியதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். சோனியா வீட்டில் இல்லாததால் அவரை தேடி வந்தனர்.
இதற்கிடையில், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சோனியா இருப்பது பற்றி தகவல் கிடைத்தது.
போலீசார் பிடிக்க சென்ற போது, சோனியா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், ஆண்களுக்கான கழிவறைக்குள் சென்று ஒழிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் பெண் போலீசார் அவரை வெளியே வரவழைத்து கைது செய்தனர்.








