உதயநிதி ஸ்டாலின் மேயர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அப்போது, அமைச்சர் அன்பில் மகேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், உள்ளிட்டோர் உடனிருந்தனர். உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சேப்பாக்கம் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு, இரண்டு கிராம் தங்க மோதிரம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது பற்றி கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.








