முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க, பொது மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபற்றி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவிட் தொற்றின் 2 வது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை அறிவீர்கள். தற்போது மாநிலத்தில் 1,52,389 பேர் இத்தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் தடையின்றி கிடைக்க செய்தல், ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்துதல், கூடுதல் மருத்துவ மற்றும் பிற பணியாளர்களைப் பணி அமர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டு வரும் நிலையில், இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களை செலவிட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம்.
இந்த சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென்று தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த பேரிடர் காலத்தில் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர் கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என உறுதி அளிக்கிறேன்.

மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் மற்றும் செலவினங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும். இந்த நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80 (G)-ன் கீழ் 100% வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு சட்டம் 2010, பிரிவு 50-ன் கீழ் விலக்களிக்கப்படும். நோய் தொற்று காரணமாக, நேரிடையாக முதலமைச்சரிடம் நன்கொடை வழங்குவ்தை தவிர்க்க வேண்டும் என்றும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்தால், பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும்.
http://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் மூலமாக நிதியை செலுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேமிப்புக் கணக்கு எண் – 117201000000070, IFSC – IOBA0001172 என்ற வங்கி கணக்கிற்கும் நிவாரண நிதியை மக்கள் வழங்கலாம்.
tncmprf@iob என்ற UPI IDஐ பயன்படுத்தியும் Phonepe, Google pay, PayTM மூலமாகவும் கொரோனா நிவாரண நிதியை வழங்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.