உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணும் வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறை உருவாக்கப்பட்டு அதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் நியமிக்கப்பட்டார். இந்த திட்டத்திற்காக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் மாவட்ட வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்பாக பயனாளிகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். இதில் வீட்டு மனைப்பட்டா, கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








