விருதுநகரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 135 பயனாளிகளுக்கு 11 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான நலத்திட்ட உதவிகளை வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இணைந்து வழங்கினர்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 73 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் விதவைகள் உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
மொத்தம் 135 பயனாளிகளுக்கு 11,13,244 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு அதில் பத்தாயிரம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு இருப்பதாகக் கூறினார்.








