மத்திய அரசுக்கு வழங்குவதைப் போலவே, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் 150 ரூபாய்க்கு சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ள சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கான விலையை 400 ரூபாயாக உயர்த்தியிருப்பது கவலையும் அதிர்ச்சியும் அளிப்பதாகக் கூறியுள்ளார்.
மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களே நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம் எனவும் மே 1-ஆம் தேதிக்குள் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் வெளிப்படையான முறையில் விலையை அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறிய நிலையில், கடுமையான விலை உயர்வைத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல் எனத் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்கூட்டியே 4500 கோடி ரூபாயை மத்திய அரசு செலுத்துகிறது என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், மாநில அரசுகள் உடனடியாக நிதிக்கு எங்கே போகும்? என்றும் மத்திய அரசு அறிவித்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு தடுப்பூசியை விற்பனை செய்ய முன் வரும் சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கு மட்டும் 400 ரூபாயாக விலையை உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், அனைத்து மாநிலங்களுக்குமே 150 ரூபாய்க்கு தடுப்பூசி கிடைக்கவும் அந்தத் தொகையை ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.







