ஓய்வை அறிவித்த இந்திய மகளிர் கிரிக்கெட்டின் தூண் மிதாலி ராஜ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். 1999-ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள மில்டன் கேயின்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஆழ்ந்த நிசப்தம். அப்போது பறந்து விரிந்த…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.

1999-ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள மில்டன் கேயின்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஆழ்ந்த நிசப்தம். அப்போது பறந்து விரிந்த புல் தரைக்கு இடையே நாலாபக்கமும் தெறிக்கும் பந்துகளுக்கு இடையில், காதுகளில் கேட்பது பரிட்சய பட்ட சத்தம் என்றாலும், பதட்டத்திற்கு நடுவே 17 வயது மட்டுமே நிறைவுற்ற ஓர் இந்திய இளம் பெண் தோன்றுகிறார் அவர்தான் மிதாலி ராஜ்.

தன் நாட்டிற்காக விளையாடும் முதல் போட்டி என்பதை தாண்டி, முதல் போட்டியிலேயே சதம் விளாசி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முக்கியத்துவம் பிடித்து, இன்று உலகம் முழுவதும் தன் பெயரை ஒலிக்க செய்து, உலக மகளிர் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறார் மித்தாலி ராஜ்.

அண்மைச் செய்தி: ‘B.E., B.Tech., B.Arch., மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அறிவிப்பு’

நாகப்பட்டினத்தை சேர்ந்த துரை ராஜ் மற்றும் லீலா ராஜ் தம்பதிக்கு 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியில் பிறந்த மித்தாலி ராஜ். தனது சிறு வயதில் பரத நாட்டிய கலைஞர் ஆக வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருந்தார். ஒரு தருணத்தில் தனது உடன்பிறப்பு மிதுன் ராஜ், ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதை பார்த்து, தானும் மகளிர் கிரிக்கெட்டர் ஆக வேண்டும் என்ற முனைப்பில், 10 வயதில் கிரிக்கெட் மட்டையை தூக்கினார். 13-வது வயதில் ஏர் இந்தியா அணிக்காக, ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கத்தின் மூலம் இடம்பிடித்தார்.

தொடர்ந்து, 1999-ஆம் ஆண்டு இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியில், அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதம் விளாசி வரலாற்றில் இடம்பிடிக்க அடித்தளமிட்டார். அன்று முதல், இன்று வரை இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த அவர், உலகமே திரும்பி பார்க்கும் வகையில், பல சாதனைகளை நிகழ்த்தி, கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் போல, உலக மகளிர் கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டராக பார்க்கப்படும் லேடி சச்சினாக மித்தாலி ராஜ் பாராட்டப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2005 மற்றும் 2017-ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவை வழிநடத்திய மிதாலி ராஜ், 6 ஐசிசி (50 ஓவர்) கிரிக்கெட் உலகக் கோப்பைகளில் பங்கேற்ற ஒரே பெண் மற்றும் உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை பெற்றார். மேலும், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த பெண் வீரராகவும், 232 போட்டிகளில் 7 சதங்களுடன் 7,805 ரன்களை குவித்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் மித்தாலி ராஜ்.

அதேபோல, 12 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதத்துடன் 699 ரன்கள் எடுத்துள்ள மித்தாலி ராஜ், டி20 பார்மெட்டில் 89 போட்டிகளில் 17 அரை சதங்களுடன் 2,364 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 பார்மெட்டிற்கு பொருந்த மாட்டார் என்ற கடுமையான விமர்சனங்களை களைந்து, இன்று உலக கிரிக்கெட் அரங்கில் சிறகடித்து பறக்கும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அடித்தளம் அமைத்து காரணகர்த்தாவாக விளங்கியவர் மித்தாலி என்பதை மறந்துவிட முடியாது.

இந்நிலையில் தான், இந்திய அரசு மிதாலி ராஜின் சாதனைகளை போற்றும் வகையில் அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, மேஜர் தயன்சந்த் கேல் ரத்னா விருதுகளை வழங்கிப் பெருமைப் படுத்தியது. மேலும், உலக கிரிக்கெட் அரங்கில், சச்சினுக்கு நிகரான சாதனைகளை செய்திருக்கும் மித்தாலி ராஜை பின்பற்றியே தற்போதைய முன்னணி நட்சத்திரங்களாக விளங்கும், பல்வேறு கிரிக்கெட் வீராங்கனைகள் வெற்றிக்கணியை பறித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது 23 வருட கிரிக்கெட் பயணத்தில், அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மித்தாலி ராஜ் அறிவித்துள்ளார். தனது 39 வயது வரை இந்திய கிரிக்கெட் அணியில் பேட்டிங்கில் சச்சினாகவும், தலைமையில் தோனியாகவும், வழிநடத்தி தனது கால் தடங்களை வழிதடமாக மாற்றி இருக்கிறார் மித்தாலி ராஜ் மகளிர் கிரிக்கெட்டில் ஓங்கியிருக்கும் ஒரே பெயர் என்றால் அது மித்தாலி ராஜ் தான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.