மேட்டுப்பாளையத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பள்ளி மாணவி பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோவை, மேட்டுப்பாளையம் அருகே தசாம்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி. இவர் மேட்டுபாளையம் சிறுமுகை சாலையிலுள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டியூஷன் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் ரோஷினியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் மாணவியையை தேடி வந்தனர். இந்நிலையில் காட்டூர் ரயில்வே கேட் அருகே மாணவியின் மிதிவண்டி நின்றது. பவானி ஆற்று ரயில்வே பாலத்தின் மேல் மாணவியின் ஷால் மற்றும் காலணி இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் போலீசார் மாணவி ஆற்றில் தவறி விழுந்துள்ளாரோ? என்ற சந்தேகத்தில் பவானி ஆற்றில் தேடினர். மேட்டுப்பாளையம் போலீசார் உடன் தீயணைப்புத் துறையினரும் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் சிறுமுகை அருகேயுள்ள மூலத்துரை பகுதியில் பவானி ஆற்றில் ஒரு சடலம் இருப்பதை அறிந்து அங்கு சென்று பார்த்தபோது அந்த உடல் காணாமல் போன மாணவியின் உடல் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாணவியின் உடலை மீட்ட காவல்துறையினர் மற்றும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனகா காளமேகன்






