தாய் பசுவை கண்டுபிடித்து தரக்கோரி கன்றுக்குட்டி கழுத்தில் பதாகை அணிவித்து அழைத்து வந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வினோதமான முறையில் பசுவின் உரிமையாளர் மனு அளித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
செல்லப்பிராணிகளை வளர்ப்பது என்றால் பலருக்கு அலாதி பிரியம். அதிலும் ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பது என்பது எல்லா விவசாய குடும்பங்களிலும் இயல்பான ஒன்று. ஆனால் அவற்றை பிரிந்து விட்டால் குடும்பத்தில் உள்ள யாரோ ஒருவரை இழந்தது போன்ற உணர்வு எல்லோருக்குமே ஏற்படும். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே கொட்டியாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன். இவர் பசுமாடு, கன்றுக்குட்டி என தனது வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்.
அப்படி அவர் வளர்த்து வரும் பசுமாடு திடிரென்று காணாமல் போயுள்ளது. விவசாயி கோவிந்தன் தனக்கு சொந்தமான உலகலாம் பூண்டி கிராமத்திலுள்ள நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் மாலை தனது பசுமாட்டை கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு மீண்டும் மாட்டுகொட்டகைக்கு சென்றபோது மாட்டுக்கொட்டகையில் இருந்த பசு காணாமல் போய் இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து பசுவை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து கஞ்சனூர் காவல் நிலையத்தில் பசுவின் உரிமையாளர் கோவிந்தன் கடந்த 19 -ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் பசு மாட்டினை திருடி சென்றவர்கள் குறித்து விசாரணை செய்யாமல் கடந்த 14 நாட்களாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் அவர் தனது தாய் பசுவை தேடி கண்டு பிடித்து தரக்கோரி கோவிந்தன் மற்றும் அவரது மனைவி சுபாஷினி நூதன முறையில் பசுவின் கன்றுக்குட்டி கழுத்தில் அம்மாவை கண்டுபிடித்து தரக்கோரி பதாகையை அணிய வைத்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிங்கள் கன்று குட்டியுடன் வந்த கோவிந்தனிடம் விரைவில் தாய் பசுவை கண்டுபிடித்து தருகிறோம் என கூறியதை தொடர்ந்து கோவிந்தன் தனது கன்று குட்டியை அழைத்து சென்றார். இச்சம்பவத்தால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பி.ஜேம்ஸ் லிசா










