மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால் தமிழ்நாட்டிற்கு கடன் சுமை: அமைச்சர் தங்கம் தென்னரசு!

மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால் தமிழ்நாடு அரசு கடன் சுமையில் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை 2024-2025-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம்…

மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால் தமிழ்நாடு அரசு கடன் சுமையில் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை 2024-2025-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.  இதனையடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.  இந்த விவாதத்திற்கு பதில் அளித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:

அரசுக்கு மாபெரும் தமிழ்க்கனவு உள்ளது.  அதனை கருத்தில் கொண்டுதான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.  மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்துக்கு ரூ.3,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் சமூக நீதி பிரதிபலிக்கிறது.

“புதிய வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  திருநங்கைகளின் உயர்கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசை விட தமிழ்நாடு அரசே கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணம் தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நிதியையும் வழங்கவில்லை. இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் திகழ்கிறது. மேலும், மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

இதையடுத்து, மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால் தமிழ்நாடு அரசு கடன் சுமையில் உள்ளது”

இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.