அமைச்சர் செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது சட்ட விரோதமானது என அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதும் மனுவில் குற்றச்சாட்டு.
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் மேகலா தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்ற அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தனது கணவருக்கு எதிராக வெறுப்பை வளர்த்துக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் தன் கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என 2022 ஆகஸ்ட் முதல் அண்ணாமலை பேசி வருவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை முறையாக பரிசீலிக்காமல் அவரை நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என்று சுட்டிக்காட்டியுள்ள மேகலா, தனது கணவரை விடுவிக்க வேண்டும் எனவும் கூடுதல் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.







