அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு..!

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் முன், சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை என அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக…

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் முன், சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை என அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்த ஆஞ்சியோ பரிசோதனையில் அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

செந்தில் பாலாஜியின் தரப்பில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி அனுமதி வழங்கினார். இதனையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார்.

இதன் பின்னர்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராம் தலைமையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் இதயத்திற்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யப்பட்டன.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு பதலளித்த நீதிபதிகள்” செந்தில் பாலாஜியை தீவிர பரிசோதனை செய்த பின்னரே நிபுணர்கள் கருத்து அடிப்படையில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதே. மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியதை நிராகரித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது அதிருப்தி அளிக்கிறது.” என அமலாக்கத்துறையின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளதாவது..

“செந்தில் பாலாஜியை ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 1:39 மணிக்கு கைது செய்யப்படும் முன் சட்ட விரோதக் காவலில் வைக்கவில்லை. ஜூன் 13ஆம் தேதி நடந்த சோதனையின் போது அமைச்சர் அங்கு இருந்தார். அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு. சம்மனை அமைச்சர் செந்தில்பாலாஜி பெற மறுத்ததார்.

அதிகாரிகளை மிரட்டும் தொணியில் அவர் நடந்து கொண்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். சாட்சிகளை கலைத்து, ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் அவர் கைது செய்யப்பட்டார். இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து, செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற குற்றம் புரிந்துள்ளார் என நம்ப போதுமான காரணங்கள் உள்ளன.

பெருந்தொகையை டெபாசிட் செய்யப்பட்டதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கைதின் போது காரணங்கள் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும்” என அமலாகத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.