ஆளுநரே குழந்தை திருமணம் செய்துள்ளதாக கூறியதை வைத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போதும் வலியுறுத்துகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் ஒரு அமைச்சர் என்றும் பாராமல் அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கையை தான் விமர்சிக்கிறோம். ஆளுநரே தான், குழந்தை திருமணம் செய்துள்ளதாக கூறியுள்ளார். இதை வைத்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்கலாம் என்றால் அதையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு இரவு நேரம் மின்கட்டணத்தை அறிவித்து கெடுக்கிறது என்று விமரிசித்த அவர், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சுந்தரகாண்டம், ராமாயணம், மகாபாரத்தை படித்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்று கூறியுள்ளார். இது வேடிக்கையாக உள்ளது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை நீக்கி விட்டு மனுநீதி அடிப்படையில் அரசியல் சாசனத்தை உருவாக்க முயல்கிறது மத்திய பாஜக அரசு. அரசியல் ரீதியாக பாஜகவை எதிர்ப்பது மட்ட்மல்லாமல் பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு போன்றவற்றிற்காகவும் போராட வேண்டி உள்ளது என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த உபேசிய அவர், பெண்கள் முறைப்படி தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 90 சதவீதம் இடங்களில் அவர்கள் சார்ந்த ஆண்கள் அதிகாரத்தை கையில் வைத்துள்ளனர். பெண்ணுரிமை மறுக்கப்படும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. அரசு அலுவலகங்களில் மருத்துவமனைகளில் தொகுப்பு ஊதியம் பகுப்பு ஊதியம் என்று தான் உள்ளதே தவிர பணி நிரந்தரம் என்பதே இல்லை இவையெல்லாம் அடிப்படியான பிரச்சனைகள். இவற்றை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








