”அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி கைதுசெய்யப்படவில்லை!” ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறு என அமலாக்கத்துறை விளக்கம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறு என்றும் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பாட்டுள்ளதாவது: கேரள மாநிலம்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறு என்றும் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பாட்டுள்ளதாவது:

கேரள மாநிலம் கொச்சியில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக தவறான செய்தி பல செய்தி ஊடகங்களில் வெளியானது. இது முற்றிலும் தவறானது. அசோக் குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படவில்லை.

தற்போதையை விசாரணையின் ஒரு பகுதியாக 6.06.2023, 21.06.2023, 29.06.2023 மற்றும் 15.07.2023 ஆகிய நாட்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் இதுவரை அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பொறுத்தமற்ற காரணங்களை கூறி அமலாக்கத்துறை முன் ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார்.

இதே போல அசோக் குமாரின் மனைவி நிர்மலா மற்றும் அவரது மாமியார் லட்சுமி ஆகியோருக்கு 4 முறை சம்மன் அனுப்பியும் இதுவரை அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

குற்றத்தின் வாயிலாக கிடைத்த வருமானத்திற்கும் இந்த மூன்று பேருக்கும் தொடர்புள்ளது என்பதற்கு ஆவணங்கள் உள்ளதாகவும் அமலாக்கத்துறையின் இந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அமலாக்கத்துறையின் இந்த விளக்கத்தில் செந்தில் பாலாஜியை முன்னாள் அமைச்சர் என குறுப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராகவே தொடர்வார் என அறிவித்துள்ள நிலையில், மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை முன்னாள் அமைச்சர் என குறிப்பிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.