நீட் தேர்வு தோல்வி காரணமாக மகனும், தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தந்தையின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது, தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை ஆளுநர் புரிந்து கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் போட்டோகிராபராக பணியாற்றிவந்தார். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் தொடர்ந்து 2 முறையும் தேர்ச்சி பெறவில்லை. எனினும் மீண்டும் 3-வது முறையாக நீட் தேர்வு பயிற்சி பெற ஆன்லைனில் பணமும் கட்டியுள்ளார்.
இதனிடையே அவருடன் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் வெவ்வேறு பொறியியல் என வெவ்வேறு படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இதனால் சோகத்தில் இருந்த ஜெகதீஸ்வரன் சனிக்கிழமை வீட்டில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். மகனின் இழப்பை தாங்க முடியாமல் தந்தை செல்வமும் இன்று காலை உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்நிலையில் ஜெகதீஸ்வரனின் குரோம்பேட்டை இல்லத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :“தவறான முடிவை யாரும் எடுக்க வேண்டாம். நீட் குறித்து புரிந்து கொள்ளாமல் ஆளுநர் பேசி வருகிறார். தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை ஆளுநர் புரிந்து கொள்ளவேண்டும். நீட் தேர்வுக்கு திமுக என்றுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது” என உதயநிதி தெரிவித்தார்.






