”அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை, மத்திய அரசின் அடக்குமுறை” – சீமான் கண்டனம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அடக்குமுறை, தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போல் பல வேலைகளை மத்திய அரசு செய்யும் என நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அடக்குமுறை, தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போல் பல வேலைகளை மத்திய அரசு செய்யும் என நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெற உள்ள நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் வந்த சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சி முறையாகும். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த நேரத்தில் அவர் குணமாகி வர வேண்டும் என வாழ்த்துக்கிறேன். யார் வந்தாலும் அவர்களது வசதிக்கு ஏற்றபடி அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இதே போன்று பல வேலைகளை மத்திய அரசு செய்யும்.

சிபிஐ அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல் செயல்படுகிறது. இந்த அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி இல்லை இது கொடுங்கோலாட்சி முறை. அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட ஊழல் என குற்றம் சாட்டுவது, காலம் தாழ்ந்த நடவடிக்கை. மத்திய அரசு மிரட்டி அச்சுறுத்தும் பாணியில் பணிய வைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.