அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அளித்து, வழக்கை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான கைது நடவடிக்கை சட்டப்பூர்வமானது எனக்கூறி, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தீர்ப்பளித்தார்.
இதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏற்கனவே அமலக்கத்துறை கோரிய 15 நாட்கள் காவல் காலம் முடிந்து விட்டது. எனவே இனி அவரை அமலாக்கத்துறையால் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது. மேலும் சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தை பொறுத்தவரை நீதிமன்ற காவல் என்பது இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டது.
மேலும் வழக்கை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், 26-ம் தேதி வரை வழக்கில் வேறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







