அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு; நாளைக்கு ஒத்திவைப்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதமானது, செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்பன உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தனர். அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக எடுத்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.

அதில், நீதிபதி ஜெ. நிஷா பானு “ மேகலாவின் மனு விசாரணக்கு உகந்ததே. அதனால் ஆட்கொணர்வு ஏற்கப்படுகிறது. செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது” என தீர்ப்பளித்தார்.

ஆனால், நீதிபதி பரத சக்ரவர்த்தி ”நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. அதனால் மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என தீர்ப்பளித்தார்.

தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மூன்றாவதாக யார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஒரு நீதிபதியை நியமிப்பார். அவ்வாறு நியமிக்கப்படும் மூன்றாவது நீதிபதி தனியாக இந்த வழக்கை விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக  சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ”மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வர உள்ளதால் இந்த வழக்கை வரும் செவ்வாய்கிழமை விசாரிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு நீதிபதி, இந்த வழக்கை வரும் சனிக்கிழமை முழுவதும் விசாரிக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ”நீண்ட வாதங்களை முன்வைத்து இந்த வழக்கு தாமதமாக கூடாது. வரும் சனிக்கிழமை விசாரிக்கப்பட வேண்டும்” என்று கோரினார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், “செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நாள் குறித்து நாளை இறுதிமுடிவு செய்யப்படும்” என்று வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எதையும் மறைக்கக் கூடாது என்ற நீதிபதி, அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.