குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணிற்கும் இயற்கைக்கும் செய்யும் அநீதி என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற்த்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குப்பைக்கிடங்குகளில் பயோமைனிங் முறைப்படி குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். குப்பை கிடங்குகளில் இருக்கும் குப்பைகளை அகற்றி அங்கு அடர்வனம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் எனவும் அறிவித்தார்.
கோவை வெள்ளலூரில் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பைக்கிடங்கை அகற்றினால் அந்த இடம் 5000 கோடி ருபாய்க்கு சமமாகும் எனவும் அவர் தெரிவித்தார். அந்த குப்பைக் கிடங்கை 150 கோடி ரூபாய் செலவில் பயோ மைனிங் திட்டத்தின் மூலம் அகற்றும் பணி விரைவில் தொடங்கும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார்.
மேலும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் குப்பைகளை போட குப்பைத்தொட்டிகளை தேடும் சூழலில் தமிழ்நாட்டில் குப்பைகளை சாலைகளில் வீசிச் செல்வதை பார்க்க முடிவதாகவும் தெரிவித்த அமைச்சர், குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணிற்கும் இயற்கைக்கும் நாம் செய்யும் அநீதி எனவும் பதிலுரையில் தெரிவித்தார்.
இயற்கையை துன்பப்படுத்தியிருக்கிறோம், இயற்கையை மனிதர்களை வீணடிக்கலாம், இயற்கை மனிதனை தாக்கும் என்ற நியதி இருக்கிறது, உலக வெப்பமயமாதல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, காலநிலை மாற்றத்தில் தாக்குப்பிடிக்கும் மாநகரமாக சென்னை உள்ளது என்றும் கூறினார்.







