நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் எடுத்துரைக்கப் போவதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சசுக் மாண்டவியாவை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகளை எடுத்துரைக்க உள்ளார். இதற்காக டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவதற்காக நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடுத்துச் செல்வதாகக் கூறினார்.
தமிழகத்தில் 1 கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக உடனடியாக வழங்க வேண்டும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு சார்பாக வலியுறுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அளித்துள்ள அறிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பார் என்று குறிப்பிட்டார்.







