வெள்ளத்தில் சான்றிதழ்கள், ஆவணங்கள் தொலைந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிதாக அவற்றை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளிலிருந்து அதிக அளவு தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படுகிறது. இதையடுத்து காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஏராளமான மக்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
காவேரி ஆற்றில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு 2லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வர தொடங்கியதாகவும், அது தற்போது, 1 லட்சத்து 10 ஆயிர கன அடியாக குறைந்துள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.
காவேரி கரையோர மக்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், பாதிப்புகள் குறைந்துள்ளதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் கூறினார். வெள்ள அபாயம் உள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 ஆயிரத்து 109 பேர் 53 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசு ஆவணங்கள், சான்றிதழ்கள் வெள்ளத்தில் தொலைந்தாலோ, பாதிக்கப்பட்டாலோ ஆவணங்களை புதுப்பித்து தர மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அரசு மேற்கொண்ட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வெள்ளத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்..ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.