இலவச அரிசி திட்டம் – அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்து

மத்திய அரசு இலவச திட்டங்களுக்கு தடை அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் இலவச அரிசியை நிறுத்திவிடுமோ என்பதில் எங்களுக்கு அச்சமில்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சரவைக் கூட்டத்தை முடித்துவிட்டு இன்று…

மத்திய அரசு இலவச திட்டங்களுக்கு தடை அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் இலவச அரிசியை நிறுத்திவிடுமோ என்பதில் எங்களுக்கு அச்சமில்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று அமைச்சரவைக் கூட்டத்தை முடித்துவிட்டு இன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சொந்த தொகுதியான திண்டுக்கல், ஆத்தூர் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மத்திய அரசு இலவசங்களுக்குத் தடை விதிப்பால் ரேஷன் கடையில் வழங்கும் இலவச அரிசி பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, மத்திய அரசு அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் இலவச அரிசியை நிறுத்திவிடுமோ என்பதில் எங்களுக்கு அச்சமில்லை. தமிழகத்தில் பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து தற்போது நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

இந்தத் திட்டங்களால் மதுரை முகமே தற்போது மாறி உள்ளது. மழைநீர் வடிகால் திட்டம், 50 வருடங்களுக்கு முன்னால் கூட இந்த திட்டங்கள் ஆரம்பிக்கவில்லை, தற்போது தான் ஆரம்பித்துள்ளோம். எதற்காக என்றால் மக்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே. தொடர்ந்து 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டங்களை எல்லாம் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளோம். டெல்லியில் நடைமுறையில் உள்ள உயர்தர கல்வித் திட்டத்தை  ஏழைகளுக்கு கொண்டு சேர்ப்பதற்காக தமிழக அரசு தமிழகத்தில் பல இடங்களில் இத்திட்டத்தை ஆரம்பிக்கிறோம். இது மாநகராட்சிப் பள்ளியில் கொண்டு வருவது மிகப்பெரிய விஷயம்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் ரேஷன் அரிசி எவ்வாறு முறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்த கேள்விக்கு, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு எந்த முறையில் செயல்படுத்தப்பட வேண்டுமோ அந்த முறையில் உணவுத் துறை அமைச்சர் செயல்படுத்துவார் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.