இலவசங்கள் என்ன செய்தது தமிழகத்திற்கு?

மக்களுக்கு விலையில்லாமல் பொருட்களை வழங்குவது என்பது இந்தியாவில் நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ள ஒரு விஷயம். இருந்தாலும்  மக்களுக்கு இலவசமாக பொருட்களைக் கொடுப்பது சரியா, தவறா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இந்திய அரசியல்…

மக்களுக்கு விலையில்லாமல் பொருட்களை வழங்குவது என்பது இந்தியாவில் நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ள ஒரு விஷயம். இருந்தாலும்  மக்களுக்கு இலவசமாக பொருட்களைக் கொடுப்பது சரியா, தவறா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இந்திய அரசியல் களத்தில் இருந்து வருகிறது.

அடித்தட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் கல்வி, புத்தகங்கள், பயணம், மருத்துவம், உணவு என அனைத்தும் தொடக்கத்தில் இலவசத் திட்டங்கள் என்று அழைக்கப்பட்டன. பிறகு விலையில்லா திட்டங்கள் என்றும், தற்போது மக்கள் நலத்திட்டங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. விலையில்லாத் திட்டங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது, அது தமிழ்நாட்டின் அரசியல், சமூக, பண்பாட்டு மற்றும் எளிய மக்களின் பொருளாதார தளத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் மிக முக்கியமானவை.

தற்போது இந்தியா முழுவதும் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு முன்னோடியாக இருந்தது தமிழகம் தான். ஆம், சென்னையில், நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒருவேலையாவது இலவசமாக மதிய உணவு வழங்க வேண்டுமென அந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் நிதி பற்றாக்குறை பிரச்னைகளுக்காக  கைவிடப்பட்ட அந்த திட்டமானது,  அதற்குப் பிறகு காமராஜர் ஆட்சிக் காலத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டது. பின்னர் 1982ல் தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டு,1989ல் இருந்து சத்துணவுடன் முட்டையும் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கும் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை, பேருந்தில் இலவசப் பயணம் ஆகியவையும் இன்றும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் தான் தமிழகத்தில் படித்தோர் எண்ணிக்கை 80 சதவீதத்திற்கும் அதிகரிக்க மிக முக்கிய காரணிகளாக அமைந்தது.

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்து வசதிகளே இல்லாத குக்கிராமங்களில் தவித்த கொண்டிருந்த மாணவர்களுக்கு பள்ளிக் கூடத்தை எட்டி பிடிக்க பேருதவியாக இருந்தது இந்த திட்டம்.

1960களில் தமிழகத்தில் ஆதார உணவுத் தேவையான அரிசி கிடைப்பதில் ஏற்பட்ட தட்டுப்பாடும், உணவு பஞ்சமும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அப்போது அண்ணாவின் ”ஒரு ரூபாய்க்கு 3 படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’  என்ற தேர்தல் வாக்குறுதி பசி பிணியிலிருந்து மக்களை விடுவிக்க வழிகோலியது.  2008ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு தரப்பட்டு, பின்னர் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற விலையில் தரப்பட்டு வந்தது.

2011ஆம் ஆண்டு முதல்,  அரிசி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மாதம் தோறும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 12 கிலோ முதல் 20 கிலோவரை அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.  பசியில்லா தமிழகம் என்ற இலக்கின் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர இவை முக்கிய காரணம்.

1989ஆம் ஆண்டு முதல் 5 குதிரைத் திறன் கொண்ட விவசாய மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, தற்போதும் நடைமுறையில் இருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பயனை அறுவடை செய்ய வைத்தது இந்த திட்டம். 2006 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற திமுக இலவச கலர் டீவி, கேஸ் அடுப்பு வழங்கியது. இலவச கலர் டிவி வழங்கியதற்கு பல எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் கூட, மக்களின் அரசியல் தெளிவுபெற இலவச கலர் டிவி முக்கிய பங்காற்றியது.

அதன்பிறகு 2011ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. இலவசமாக கிரைண்டர், மிக்சி, மின் விசிறி ஆகியவற்றை வழங்கியது. வீட்டு வேலைகளிலேயே பகுதி  நேரம் சுழன்று கொண்டிருந்த பெண்களுக்கு இந்த திட்டமே ஓரளவு சுதந்திர காற்றை சுவாசிக்க செய்தது .
வசதிப்படைத்தவர்களுக்கே கைவசமாக இருந்த மடிக்கணினிகள், ஏழை மாணவர்களின் கைகளுக்கும் கிடைக்கச் செய்தது இலவச மடிக்கணினி  வழங்கும் திட்டம்.

2016ஆம் ஆண்டிலிருந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைப் பொறுத்தவரை முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டிலிருந்து மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. முதலில் 5,000 ரூபாய் வழங்கப்பட்டு பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 2016ல் 50,000 ரூபாயோடு சேர்ந்து 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தை ரத்து செய்யப்பட்டு, பட்டப்படிப்பு படிக்கும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவுள்ளது.


2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் சாதாரண நகர்ப்புற பேருந்துகளில் பெண்களுக்கான பயணம் இலவசமாக்கப்படுகிறது. இதன்மூலம் 115 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் தான் தமிழகத்தை ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறியீட்டின் அடிப்படையில் நாட்டின் முதல் 3 மாநிலங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது. மாநில தொழில்துறை வளர்ச்சிக்கும் வித்திட்டுள்ளது.

இலவசங்களால் பணம் படைத்தவர்களுக்கும் பயன் அடைவதாக ஒரு தரப்பினர் கூறினாலும் அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்படுவதற்கான வாய்ப்புக்களே, அதிகமாக இருப்பதாக பொருளாதார நிபுணர்களும், அரசியல் விமர்சகர்களும் வாதிடுகின்றனர். அண்ணாவின் அரிசி தொடங்கி,  ஸ்டாலினின் மகளிருக்கான இலவச பேருந்து வரை  இலவசத் திட்டங்கள் வெறும் தேர்தல் வெற்றிக்கான அஸ்திரங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் வளர்ச்சியை மேல் நோக்கி கொண்டு போகும் ஒரு வடிகாலாகவே அமைந்துள்ளது.

மொத்தத்தில் இலவசங்களை, இலவசங்களாக மட்டுமே பார்க்கத் தேவையில்லை அது சமூக, பொருளாதார சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு ஆயுதம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

– வசந்தி பாரதி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.