வேலூர் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில், இன்று பிற்பகல் 3.14 மணியளவில் திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வு ரிக்டர் அளவுகோலில்3.5 ஆக பதிவாகியுள்ளது. அதனால் இந்த நில அதிர்வை, பெரிய அளவில் பொதுமக்கள் உணரவில்லை. இருந்தாலும் சில பகுதிகள் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்துள்ளன. இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆந்திர மாநிலம் சித்தூரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வேலூர் மாவட்டத்தில் உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூரில் இருந்து 50 கிலோமீட்டரில் மேற்கு-வடமேற்கு திசையில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நவம்பர் மாதம் 29-ஆம் தேதியும் நில அதிர்வு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.







