மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “2021-2022ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட 3,524.69 கோடி ரூபாயானது தொழிலாளர்களின் கணக்கில் முழுமையாக வரவு வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஏதும் விடுவிக்கப்படாத காரணத்தால், 1178.12 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக சுட்டிக் காட்டிய முதலமைச்சர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நிலையில், தற்போது ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சிரமத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புக்காக நகர்ப்புறத்தை நோக்கி இடம்பெயர வழிவகுக்கும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பண்டிகை காலத்தினைக் கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.








