அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தனியார் சார்பில் ஆம்னி பேருந்துகளிலும் இயக்கப்படுகின்றன. எனினும், பல ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனிடையே போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக சிறப்பு சோதனை செய்ததில் 222 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. அபராதமாக ரூ.3,11,500 மற்றும் வரி ரூ.57,000 வசூலிக்கப்பட்டது. இணக்கக் கட்டணமாக ரூ.4,32,500 நிர்ணயிக்கப்பட்டது. பின்வரும் 8 வாகனங்கள் அதிக கட்டணம் வசூலித்தற்காகவும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதற்காகவும் சிறைபிடிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையானது வரும் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது. அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை (Toll Free – 1800 425 6151) மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








