மேட்டூர் அணையின் அருகே உபரி நீர் தேங்கியிருக்கும் பகுதியில், நாட்டு வெடி குண்டுகளை வீசி மீன் பிடிப்பதால் அணைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் 16வது – கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது. நீர் வரத்து குறைந்ததால் 16வது கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டது.
இதனால் தங்கமாபுரி பட்டினம், சின்னக்காவூர், சேலம் கேம்ப் பகுதிகளில் ஆங்காங்கே குளங்கள் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய நீரில் கட்லா, ரோகு, கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, அரஞ்சான் உள்ளிட்ட மீன்கள் டன் கணக்கில் காணப்படுகின்றது. இதனை சாதகமாக்கி கொண்ட சமூக விரோதிகள் நாட்டு வெடி குண்டுகளை (தோட்டா) வீசி மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் நாட்டு வெடி குண்டுகளை வீசி மீன் பிடிக்கும் கும்பல் பெரிய மீன்களை மட்டும் எடுத்துக்கொண்டு சிறிய மீன்களை தண்ணீரில் விட்டு செல்கின்றனர். இதனால் கரையில் இருபுறங்களிலும் மீன்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மேட்டூர் அணையில் மீன் வளங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். மேட்டூர் அணையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் வெடி வைத்து மீன்பிடிப்பதால் அணைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே நாட்டு வெடி தயாரிக்க பயன்படும் ஜெலட்டின் குச்சிகள் விநியோகம் செய்யும் நபர்கள் மீதும், வெடிகுண்டு வீசி மீன் பிடிக்கும் சமூக விரோதிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.








