நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, செய்தி வெளியாகிய சில மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி புதுமண தம்பதிக்கு உதவி கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி கிராமத்தில் வசித்துவரும் குணசேகரன் மகள் ஷர்மிளாவுக்கு (மாற்றுத்திறனாளி) பல வருடங்களாக வரன் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், சேத்தியாதோப்பை சேர்ந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளியான உமாநாத் என்பவருக்குச் சம்பந்தம் பேசியுள்ளனர். ஆனால், பெண்ணின் பெற்றோர் அரசு வழங்கக்கூடிய திருமண தொகை மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை நம்பி திருமணத்தை முடித்து விடலாம் என நம்பி இருந்ததாகவும், இந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டது தற்போதுதான் தெரியவந்ததாகவும், கூறி வேதனை தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி: ‘வேதாரண்யத்தில் இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு’
இந்நிலையில், திருமண செலவிற்குப் பணம் இல்லாமல் தவித்து வந்தநிலையில், எளிமையாகத் திருமணத்தை முடிக்க நினைத்த அவர்கள், அங்கு உள்ள அம்மன் கோவிலில் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி திருமண செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி புதுமண தம்பதியர் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வாயிலாக, தமிழக அரசு ஏதாவது உதவி செய்து வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் எனக் கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்தனர்.
இதனை நாம் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில்,செய்தியைக் கண்ட குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ஜி தமிழ் வாணன் தனது சொந்த செலவில் மாற்றுத்திறனாளி புதுமண தம்பதிக்கு அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று தையல் இயந்திரம் வழங்கியுள்ளார். செய்தி வெளியாகி சில மணி நேரத்தில் அவர்களுக்கு உதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.








