நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அமிதாப் கந்த். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் நிதி ஆயோக் அமைப்பின் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அமைச்சரவை நியமனக் குழுவின் ஒப்புதலின் படி அவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
அமிதாப் காந்த்தின் பதவி காலம் ஜூன் 30 உடன் நிறைவு பெறுவதையொட்டி புதிய அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பதவியேற்றதில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை இந்த பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பரமேஸ்வரன் ஐயர்?
1981ம் ஆண்டு உத்தரப்பிரதேச கேடல்ர ஐஏஎஸ் அதிகாரியான பரமேஸ்வரன் ஐயர், சுகாதாரப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டிய அதிகாரி ஆவார். 2009ம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பிறகு ஐக்கிய நாடுகள் சபையில் கிராமப்புற தூய்மைப் பணி சார்ந்த பிரிவில் மூத்த அதிகரியாக பணியாற்றினார்.
தொடர்ந்து 2016 இல் இந்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தில் பணியாற்றினார். தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தில், திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிக்கவும், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் நாடு தழுவிய துப்புரவுப் பிரச்சாரத்தை செயல்படுத்த மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
மேலும், இவர் வியட்நாம், சீனா, எகிப்து, லெபனான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உலக வங்கிக்காக பணியாற்றியுள்ளார்.
நிதி ஆயோக்
நிதி ஆயோக் (NITI Aayog) என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு திட்டக்குழுவை மாற்றி நிதி ஆயோக் குழு உருவாக்கப்பட்டது. இது கடந்த 2015, ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டில் உள்ளது.








