பெண்களுக்கு தனது விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு என்பதை புரியாமல் கட்டாயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைக்கின்றனர் என மதுரை நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் ஏ.சி. மெக்கானிக். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவி பள்ளி முடிந்து தோழிகளுடன் வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் அங்கு வந்த பாலமுருகன் மாணவியை தடுத்து நிறுத்தி தன்னை காதலிக்குமாறு தகராறு செய்துள்ளார். பின்னர் மாணவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் எரிந்து தீக்காயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து பாலமுருகனை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிடையில் மேல்முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,
*காதலை ஏற்க மறுத்த பெண் உலகில் இருக்கக் கூடாது, வேறு யாருடனும் வாழக் கூடாது என முடிவு செய்து காதலிக்க மறுத்த மாணவியை கொலை செய்யும் முடிவுக்கு மனுதாரர் வந்துள்ளார்.
*பெண்களுக்கு தனது விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு என்பதை புரியாமல் கட்டாயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைக்கின்றனர்.
* இந்தக் கால இளைஞர்கள் சுலபமாக உணர்ச்சி வசப்படுகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் மறுக்கப்படும்போது, பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் கொடூர மன நிலைக்குச் செல்கின்றனர்.
*இதனால் நமது கல்வி முறையில் நுண்ணறிவு அளவுகோலை காட்டிலும், உணர்வுபூர்வமான அளவுகோலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
*உணர்வுபூர்வமான அளவுகோலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் இளைஞர் எவ்வளவு தான் திறமையானவராகவோ, வெற்றியாளராகவோ இருந்தாலும் அவரால் உணர்வுபூர்வமான சவால்களை எதிர்கொள்ள தயாராக முடியாது என உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது. இதனால் கீழமை நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முகாந்திரம் இல்லை. கீழமை நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. எனவே மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. என உத்தரவிட்டுள்ளனர்.







