மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு

மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.   தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி பேருந்து ஒன்று சென்றது. மத்தியப்பிரதேச…

மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி பேருந்து ஒன்று சென்றது. மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதி அருகே பேருந்து சென்றபோது, அந்த வழியாக வந்த லாரியும், பேருந்தும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள பொதுமக்கள் உதவுயுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையிலும், சிலர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தெரிவித்த காவல்துறையினர், பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச மாநில மக்கள் என்று தெரிய வந்துள்ளதாக தெரிவித்தனர். இதனிடையே, உயிரிழந்தவர்களுக்கு உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.