மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழா தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற…

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான மாசிபெருவிழா கடந்த 18-ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 19ஆம் தேதி மயானக் கொள்ளை நிகழ்வும். 22ஆம் தேதி தீமிதி விழாவும் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்நிலையில் மாசி பெருவிழாவின் 7-ம் நாளான இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக திருத்தேரோட்டத்தை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கும் பால், பழம், பன்னீர் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு தங்க கவசம் பொருத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தேரோட்டத்தை முன்னிட்டு 96 அடி அலங்கரிக்கப்பட்ட தேரானது கோயிலின் வடக்கு வாயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டும், கோயில் உட்பிரகாரத்தில் இருந்து உற்சவர் அம்மனை பம்பை, உடுக்கை உள்ளிட்ட மேளதாளங்களுடன் பூசாரிகள் தோளில் சுந்து சென்று ஊஞ்சல் மண்டபத்தில் வைக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவர் திருத்தேரில் அமர வைக்கப்பட்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்ட கோயிலின் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தாங்கள் காணிக்கையாக கொண்டு வந்த பொருட்களை சூறையிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.

தேர் திருவிழாவை கான விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.