மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ள கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது மேகதாது அருகே அணை கட்டுவது கர்நாடகா மாநிலத்தின் உரிமை, அதை கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா, ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும், கர்நாடகா அரசியல் சூழ்நிலை, வளர்ச்சி குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் எடியூரப்பா குறிப்பிட்டார்.
மேகதாது விவகாரத்தில் கீழ்பாசன மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ச்சியாக ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறிய அவர், மேகதாது அருகே அணை கட்டுவது கர்நாடக மாநிலத்தின் உரிமை எனக்கூறினார். மேலும் அணை கட்டுவதற்கு உரிய அமைப்புகள் மற்றும் ஆணையங்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கீழ் பாசன மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்பது தனது வேண்டுகோள் என தெரிவித்த எடியூரப்பா, இந்த திட்டத்தினால் அனைத்து மாநில மக்களும் பலன் அடைவார்கள் எனவும் கூறினார்.








