கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோருடன் இணைந்து ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்துக் கடிதம் அளித்துள்ளார்.
அக்கடிதத்தில்,
கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR), ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகமும், மத்திய நீர் ஆணையமும் (CWC) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது.
காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் புதிய நீர்த்தேக்கங்கள் அமைத்தல் அல்லது நீரைத் திசைதிருப்புதல் உள்ளிட்ட எந்தவொரு புதிய திட்டத்தையும், காவிரிப் படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பூர்வ ஒப்புதல் மற்றும் இசைவு இல்லாமல் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
என வலியுறுத்தியுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், இக்கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அமைச்சர் என். ஆனந்த்:
“மத்திய அமைச்சரை மேகதாது தொடர்பாகச் சந்தித்தோம். இந்த விவகாரத்தில் சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம் என்று தெரிவித்தோம். தமிழகத்தின் உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதையும் தெரிவித்துள்ளோம்” என்று கூறினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:
“2018-ஆம் ஆண்டு தீர்ப்புதான் இறுதியானது. அந்தத் தீர்ப்பை யாரும் மீற முடியாது என்பதைத் தெரிவித்தார். அந்தத் தீர்ப்பை மீறி கர்நாடக அரசு செயல்படுகிறது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா கையிலெடுத்துள்ளது.
டி.பி.ஆர். தயாரிக்கப்பட்டால், அதன் மீது எந்தவொரு முடிவும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம். எங்களுடைய கருத்துகளை கூர்மையாகக் கேட்ட மத்திய அமைச்சர், டி.பி.ஆர். தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று உறுதியளித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்திற்கு மிகவும் சாதகமாக உள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை மீறி எதையும் செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் இரு மாநில மக்களும் பரஸ்பரம் அன்பு வைத்திருக்கிறார்கள். எனவே, அரசியல்வாதிகளின் சில வார்த்தைகளுக்குப் பதிலுக்குப் பதில் எந்தவொரு கருத்தையும் கூற முடியாது. 2018-ஆம் ஆண்டு தீர்ப்பைப் பொறுத்தவரை, சட்ட வல்லுநர்களுக்கு இது மிகத் தெளிவாகத் தெரியும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழகத்திற்குச் சாதகமான நிலையே உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.




