ஆன்லைன் சூதாட்டம், பெட்டிங் உள்ளிட்டவை தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரிக்கவோ கூடாது என ஊடகங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், சமூக – பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தையும், இளைஞர்கள், குழந்தைகளிடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சூதாட்ட விளம்பரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, இதுபோன்று மக்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் சூதாட்டம், பெட்டிங் போன்ற விளம்பரங்களைக் காட்சி ஊடகங்கள், செய்தித்தாள்கள், செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பவோ, விளம்பரப்படுத்தவோ கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள், சமூக வலைத்தளங்களும் பொதுமக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








