மேகதாது எங்கள் உரிமை, அணை கட்டுவது உறுதி – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்!

மேகதாது எங்கள் உரிமை, அணை கட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை…

மேகதாது எங்கள் உரிமை, அணை கட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு, 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என, தமிழ்நாடு அரசு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது.

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்தது. மேகதாதுவில் அணை கட்டி 66 டிஎம்சி தண்ணீரை தேக்கினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராது, தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக பதவி வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் முதன்முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், நீண்ட நாளாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டமான மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை அமல்படுத்த விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து அனுமதி பெற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் மேகதாது அணை கட்டுவது தங்களது உரிமை என்றும், அதுவே குறிக்கோள் என்றும் தெரிவித்தார். வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.