மேகதாது அணை விவகாரம் : நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் அமைச்சர் துரை முருகன்..!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை காலை அமைச்சர் துரை முருகன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில துணை முதலமைச்சர் D.K. சிவக்குமார், மத்திய நீர்வழித் துறை அமைச்சர்…

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை காலை அமைச்சர் துரை முருகன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் D.K. சிவக்குமார், மத்திய நீர்வழித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று எழுதியுள்ள கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழ் நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாகவும், அத்திட்டங்களை நியாயப்படுத்தும் தமிழ் நாடு அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் இரட்டை நிலையை எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அரசு முறை பயணமாக டென்மார்க் சென்று திரும்பிய நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

” நீர்வளத் துறையில் எப்படி சிக்கனத்தை பயன்படுத்துவது நீர்வளத் துறையில் நீரை எப்படி பாதுகாப்பது உலகத்திலேயே முன்னோடி முன்னோடி திட்டமாக இருப்பது டென்மார்க். எனவே சென்னையில் இருக்கக்கூடிய இது போன்ற ஆறுகளிலும் சீரமைக்க வேண்டிய எண்ணம் அரசுக்கு உள்ளது.

எனவே இது குறித்து அந்த அரசாங்கத்திடம் பேச வேண்டும் என்று நாங்கள் விருப்பம் தெரிவித்திருந்தோம் அங்கு இருக்கக்கூடிய நீர்வளத்துறை அமைச்சர் உடன் நீண்ட நேரம் நம்முடைய நிலைமைகளை எடுத்துச் சொன்னோம் அவர்களும் கனிவாக கேட்டனர்.

அது மட்டும் இல்லாமல் உடனடியாக ஒரு வார காலத்திற்குள் டென்மார்க் அதிகாரிகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பு உள்ளனர். இதனை தொடர்ந்து நம்முடைய அதிகாரிகளுடன் உட்கார்ந்து பேசி என்ன நிலைமை என்று நேரில் கண்டு நம்மோடு பேசிய பிறகு ஒரு திட்டம் வகுக்கப்படும் என்ற உறுதியோடு நாங்கள் அங்கிருந்து வந்துள்ளோம். சென்ற பயணம் சிறப்பாக இருந்தது.

காவேரியின் நிர்வாகத்தை தற்போது காவேரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது வழக்கு தீர்ந்து இதுதான் முடிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இருக்கக்கூடிய நீர்நிலைமை என்ன என்று எனக்குத் தெரியாது இருந்தாலும் தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேச முடியாது. பேசினாலும் அது தவறு அது முடிந்து போன விவகாரம். தமிழ்நாடு கவனிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் ஒரு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது காலையில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க உள்ளேன். மீண்டும் நானே டெல்லி சென்று காவேரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளேன்.

எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. சட்டப்படியும் அது முடியாது, வேண்டுமென்றால் அவர்கள் அணைகட்டி விடுவோம் என்று பேசிக்கொண்டு இருக்கலாம் என்னைப் பொறுத்தவரையில் கர்நாடகாவின் அரசியல் ஸ்டண்ட் அவர்களால் ஒன்றும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.

கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இரண்டுமே அண்டை மாநிலங்கள். ஏராளமான தமிழர்கள் கர்நாடகாவில் வசிக்கின்றனர், ஏராளமான கர்நாடக மாநிலத்தவர்கள் தமிழகத்தில் நல்ல நிலைமையில் உள்ளனர். ஆகவே இவை எல்லாம் பாதகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தான் இரண்டு அரசுகளினுடைய போக்கு அதை தமிழ்நாடு அரசு உணர்கிறது. உள்ளபடியே அவர்களும் உணர்வார்கள் என்று கருதுகிறேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.