சென்னையில் காது, மூக்கு தொண்டை நலன் குறித்த மருத்துவ அறிவியல் மாநாடு முதன்முறையாக தமிழில் நடைபெற்று வருகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் கூட மருத்துவ நூல்களை தமிழில் வெளியிட்டுள்ளோம் என்று பேசினார்.
இந்த பேச்சை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கதில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது: 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய போது, நாட்டில் உள்ள பல மாநில அரசுகள் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வியை தாய்மொழியில் அறிமுகப்படுத்தி வருகின்றன. தமிழ்நாடும் மருத்துவ கல்விக்கான பயிற்றுமொழியாக தமிழ்மொழியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், 14 மருத்துவ படிப்புக்கான புத்தகங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழ்மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காது, மூக்கு, தொண்டை நலன் குறித்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, மருத்துவ புத்தகங்கள் தமிழில் வெளியிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா வைத்த மருத்துவம், சட்டம் மற்றும் தொழில்நுட்ப கல்வி தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு தீவிரமாக எடுத்து தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது மகிழச்சியை தருகிறது. இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.







