ஆஸ்கர் கனவும், நனவாகிய கதையும்… தெய்வமகன், சிவாஜி, ஏ.சி.திருலோகச்சந்தர்

இது ஆஸ்கர் சீசன்…. இன்று நேற்றல்ல.. பல ஆண்டுகளாக ஆஸ்கர் கனவு இந்திய திரையுலகுக்கு உண்டு… 1982 ம் ஆண்டு காந்தி ஆங்கில திரைப்படத்தில் சிறந்த ஆடை அலங்காரத்திற்காக பானு அதாலியா என்ற இந்தியப்பெண்…

இது ஆஸ்கர் சீசன்…. இன்று நேற்றல்ல.. பல ஆண்டுகளாக ஆஸ்கர் கனவு இந்திய திரையுலகுக்கு உண்டு… 1982 ம் ஆண்டு காந்தி ஆங்கில திரைப்படத்தில் சிறந்த ஆடை அலங்காரத்திற்காக பானு அதாலியா என்ற இந்தியப்பெண் கலைஞர் ஆஸ்கர் விருதை வென்றார். அதன்பின் மேற்கு வங்காள இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு 1991ல் கவுரவ விருது வழங்கப்ட்டது.

ஆனாலும் எண்ணற்ற திறமையாளர்கள் கொண்ட தென்னிந்திய திரையுலகில் ,சிவாஜி போன்ற ஜாம்பவான்கள், ஆஸ்கர் விருதை அள்ளிவந்து விடமாட்டார்களா என்ற என தமிழ் திரைப்பட ரசிகர்கள் ஏங்கிய காலமும் உண்டு.

1987ம் ஆண்டு நாயகன் திரைப்படம், 1992ல் தேவர்மகன், 1995ல் குருதிப்புனல், 1996ல் இந்தியன், 2000 ஆண்டில் ஹே ராம் என ஆஸ்கர் கதவை பல முறை தட்டிய, சில ஆண்டுகள் முன்வரை ஆஸ்கர் நாயகன் என கொண்டாடப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன். அண்மையில் ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப்படம் விசாரணை.

ஆனால் ஆங்கிலப்படத்துக்காக இசையமைத்து ஆஸ்கர் கனவை நனவாக்கிய இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது தெரிந்த கதை. தற்போது தென்னிந்திய மொழித் திரைப்படமான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல், கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில், ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது

சர்வதேச அளவில் ஆஸ்கர் என்ற விருது உள்ளது என தமிழ் ரசிகர்கள் அறிய தொடங்கிய கால கட்டத்தில் ஆஸ்கர் கனவு காணத் தொடங்கினர்…அப்போது ஆஸ்கருக்காக அனுப்பப்பட்ட சிறந்த வெளிநாட்டு மொழிப்பிரிவில் , 3 வேடங்களில் சிவாஜி நடித்த தெய்வ மகன் ஆகும். 1969ம் ஆண்டு , ஆஸ்கர் விருதுக்கு முதன் முதலில் சென்ற தென்னிந்திய திரைப்படம் ஆகும்.. இதனை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஏ.சி திருலோகசந்தர், சென்னையில் பிறந்தவர். வில்லன் நடிகர் அசோகன் ஏ.வி.எம் சரவணனிடம் திருலோகசந்தரை அறிமுகப்படுத்த, முதல்படமாக வெளியானான் விஜயபுரி வீரன். இதனையடுத்து ஏ.சி.டி காலம் தொடங்கியது. உருக்கமான சம்பவம், திரைக்கதை வடிவமைப்பு, திறமையான கலைஞர்கள், விரசமில்லாத காட்சியமைப்பு என கலவையாக ரசிகர்களுக்கு படங்களை தந்தவர் ஏ.சி.திருலோகச்சந்தர்.

3 வேடங்களில் சிவாஜி நடிக்க உருவான தெய்வ மகன் திரைப்படமும் அது படமாக்கப்பட்ட விதமும் திருலோகச்சந்தரை இன்னும் பிரபலமாக்கியது. துள்ளத்துடிக்க, நம் மனம் கனக்க, உணர்ச்சிமிகு காட்சிகளாலும் உணர்வுபூர்வ வசனங்களாலும் இரண்டையும் பிரதிபலிக்கும் நடிப்பாலும் வெளிவந்த அழகு மகன்தான் ’தெய்வமகன்’. சிவாஜி, ஜெயலலிதா, பண்டரிபாய், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், நம்பியார் ஆகியோர் தெய்வமகனின் முக்கியக் கதாபாத்திரங்கள். ‘பெத்த புள்ளயக் கொன்னுட்டோமே’ எனும் குற்ற உணர்வுடன் தந்தை சிவாஜி தத்தளிப்பார். மேஜர் சுந்தர்ராஜன், ஜெயலலிதா, தந்தை ஆகியோருடன் மூத்த மகன் சிவாஜி பேசுகிற காட்சிகள் அனைத்துமே சூப்பர் சீன்ஸ் ஆகும்… ஜெயலலிதாவுடன் காதல், வில்லன் நம்பியாருடன் சேர்ந்து மோசம் போகும் காட்சிகள் எல்லாமே பட்டையை கிளப்பிய காட்சிகள்… திரைப்படத்தில் ஒரே நேரத்தில் 3 கேரக்டர்களாக போட்டி போட்டு சிவாஜி நடித்த, ‘ப்ளாங்க் செக்’ காட்சி அற்புதம்.

அந்தக் காட்சியை சிறப்பாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் தம்பு, ஆளாளுக்கு பேசும் வசனங்கள் எனஅத்தனையும் அப்ளாஸ் வாங்கிய காட்சிகள். சென்டிமென்ட் காட்சிகளுக்கு பஞ்சமின்றி ஆரூர்தாஸ் எழுதிய உரையாடல் என சொல்லிக்கொண்டே போகலாம்…’காதல் மலர்க்கூட்டம் ஒன்று, கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா, தெய்வமே தெய்வமே…’என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்எஸ்வி அட்டகாசமான இசையைத் தந்து அசத்தியிருப்பார்.

சிவாஜியின் ‘சாந்தி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்த தெய்வமகன், படம் வெளிவந்து, நூறு நாட்களைக் கடந்து ஓடி வசூலை வாரி வழங்கி விருதுகளையும் வென்றெடுத்தது. ஆஸ்கர் போட்டிக்குச் செல்வதற்கான தகுதிக்குரிய படங்களின் பட்டியலில் இடம்பெற்று விருது பெறாவிட்டாலும் இன்றளவும் பேசப்படுவதே பெரும் வெற்றிதான். ஆஸ்கர் விருதுக்கு ஆசியாவில் இருந்து தேர்வான படம் என்றும், தமிழ்ப்படம் என்றும் கொண்டாடினார்கள் ரசிகர்கள். சொல்லப்போனால், அப்போதுதான் ‘ஆஸ்கர் விருது’ என்ற ஒன்று குறித்தே தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரியவந்திருக்கும்!. 1969 செப்டம்பர் 5-ம் தேதி வெளியான ‘தெய்வமகன்’. படம் வெளியாகி, 53 ஆண்டுகளாகிவிட்டன. தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை, ‘ஒரேயொரு சிவாஜிதான். ஒரேயொரு ‘தெய்வமகன்’தான்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.