மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள் சி.டி.ஆர் நிர்மல்குமார் மற்றும் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேசுகையில்,
“மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழா முன்னேற்பாடு பணிகள் 100% நிறைவேறி உள்ளது. சுழற்சி முறையில் அனைத்து துறை பணியாளர்கள் திருக்குட நன்னீராட்டு விழா பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எந்தவித சிரமமுமின்றி திருக்குறள் நன்னீராட்டு விழாவில் கலந்து கொள்ளலாம்.
பக்தர்களின் அடிப்படை வசதிகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழா சிறப்பாக பாதுகாப்பாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி உள்ள கட்டிடங்களை திறத்தன்மை பொதுப்பணித்துறை ஆய்வு செய்து வருகிறது. உறுதியான கட்டிடங்களில் பொதுமக்கள் இருந்து பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். 2000 பொதுமக்கள் மட்டும் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி அட்டைகள் விவகாரத்தில் நாங்கள் யாரும் தலையிடவில்லை. அனைவரையும் ஒருங்கிணைத்து குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
அமைச்சர் ரமேஷ் பேட்டி:
திருக்குட நன்னீராட்டு விழாவில் வேத மந்திரங்கள் ஓதப்படும். தமிழ் ஓதுவார்கள் யாக பூஜைகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கவில்லை. கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறை செல்லவும் அவங்களுக்கு அனுமதி உண்டு என்று தெரிவித்துள்ளார்.




