மதிமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு எவ்வித பிரச்னையுமில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார் – இதே போல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட மதிமுகவினரும் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “மதிமுகவிற்கும் எங்களுக்கும் எந்த பகையும் இல்லை. அண்ணன் வைகோவிற்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “சென்னையில் 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு எல்லாம் குண்டாஸ் இல்லையா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை நாம் எப்படி ஏற்பது” என்றதோடு, திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமை மூட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.
மலையை உடைத்து எம் – சாண்ட் தயாரித்து ஊருக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மலையை அழித்தால் மீண்டும் உருவாக்க முடியுமா ? இயற்கை வளத்தை திட்டமிட்டு எல்லோரும் சேர்ந்து அழிக்கிறார்கள். இதையெல்லாம் ஏன் பாஜக காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகள் கேள்வி எழுப்பவில்லை என்ற அவர்,
“ நீட் உள்பட எத்தனை நுழைவுத் தேர்வுகளை கொண்டுவருகிறார்கள். அப்படியென்றால் ஏன் நாட்டை ஆளும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் தேர்வு எழுதக் கூடாது?. மோடி, அமித்ஷா உள்ளிட்ட அனைவருமே தேர்வெழுத வேண்டும். ஒவ்வொரு துறைகளிலும் தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும்தான் அரசியல் தலைவர்களாக உருவாக்க வேண்டும்” எனவும் கூறினார்.







