சீர்காழி அருகே பாம்பு பிடிக்கச்சென்ற நபர் ஒருவர் அதனை அடைக்க ஏதும் கிடைக்காததால் தனது சட்டைக்குள் வைத்து கொண்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த இனாம்குணபாடியை சேர்ந்தவர் ஜெயகாந்தன்.இவரது வீட்டில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென சுமார் 6அடி நீள கருஞ்சாரை பாம்பு வீட்டில் புகுந்தது.இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடி வீரரான பாண்டியன் என்பவருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த பாண்டியன் எவ்வித பாதிப்புகளுமின்றி பாம்பை பத்திரமாக மீட்டார்.
தொடர்ந்து பாம்பை ஒரு பைக்குள் அடைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட முடிவு செய்தார். ஆனால் பை உள்ளிட்ட பொருட்கள் ஏதும் கிடைக்காததால் தான் அணிந்திருந்த மேல் சட்டையினுள் பாம்பை வைத்து கொண்டு சென்றார்.இதனை கண்ட அக்கம்பக்கதினர் அதை போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
—-வேந்தன்







