மயிலாடுதுறையில் டிராக்டரின் விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்து போலி பத்திரத்தில் கையெழுத்திட்டு மோசடி செய்ததாக நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மதன் மோகன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈசன் ஃபார்ம் மிஷனரி என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் இரண்டு டிராக்டரை வாங்கியுள்ளார். கம்பெனி விலை பட்டியலில் invoice ல் குறிப்பிடப்பட்ட 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிராக்டர்களை 6 லட்சத்து 30 ஆயிரம் என்ற விலைக்கு கம்பெனி விற்பனை செய்ததாகவும், இதனை கண்டுபிடித்து கேட்டபோது விதிகளை மீறி டிராக்டர்களை பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 2020 ஆம் ஆண்டு தயாரிப்பு தேதியிட்டு வழங்கியதாகவும், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் மற்றும் சண்முகவேல் ஆகியோர் உதவியுடன் தனக்குத் தெரியாமலேயே தனது பெயரில் வாகனத்தை போலி கையெழுத்து ரிஜிஸ்டர் செய்து போலி பத்திரம் மூலம் விற்பனை செய்ததாகவும் மதன் மோகன் புகார் அளித்திருந்தார்.
அதன் பெயரில், மாவட்ட காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவில், தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கண்ணதாசன், வேல்முருகன் ஆகிய இருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்குப் பதிவு செய்து இரண்டு மாதங்கள் ஆகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து மதன் மோகன் கையில் பதாகைகளை தாங்கியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தனி ஆளாக தர்ணா போராட்டத்தை துவங்கினார். அங்கு வந்த மயிலாடுதுறை காவல்துறை ஆய்வாளர் செல்வம்
மதன்மோகனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் நடவடிக்க எடுப்பதாக உறுதி
அளித்தார். அதன் பெயரில் போராட்டத்தை விவசாயி தற்காலிகமாக கைவிட்டார்.
.இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
——ரெ.வீரம்மாதேவி







