தர்மம் வெல்லும் என்ற நீதியை சொல்லும் நாளாக தீபாவளி அமையட்டும் – டிடிவி தினகரன் வாழ்த்து

அதர்மம் நிலைக்காது, தர்மம் வெல்லும் என்கிற நீதியை சொல்லும் திருநாளாக தீபாவளி அமைந்திருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள…

அதர்மம் நிலைக்காது, தர்மம் வெல்லும் என்கிற நீதியை சொல்லும் திருநாளாக தீபாவளி அமைந்திருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீபாவளிக்கு இருக்கும் உற்சாகம் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது என குறிப்பிட்டுள்ளார். அதர்மம் நிலைக்காது, தர்மம் வெல்லும் என்கிற நீதியை சொல்லும் திருநாளாக தீபாவளி அமைந்திருப்பதாகவும், ஒவ்வொருவரிடமும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்கட்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். உள்ளும், புறமும் உயர்ந்த சிந்தனைகளோடு இருளை அகற்றி அனைவரும் ஆனந்தமாக வாழ்ந்திட தீபாவளி, வழி காட்டட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அறியாமை எனும் இருளை போக்கி வெற்றியையும், வளர்ச்சியையும் இந்த தீபாவளி திருநாள் கொண்டு வரட்டும் என தெரிவித்துள்ளார். தீப ஒளியில் ஏழைகளின் இன்முகம் ஒளிரட்டும் அதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கொரோனா பெருந்தொற்றில் இருந்து தமிழ்நாடு முழுமையாக மீண்டு விட்ட நிலையில், இந்த ஆண்டுதான் தமிழக மக்களிடம் தீப ஒளியை வரவேற்கும் மகிழ்ச்சி தென்படுகிறது. இந்த மகிழ்ச்சி இனிவரும் காலங்களில் பெருமகிழ்ச்சியாக பெருக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்தில், தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.